Nattukkoru nalla sedhi...

Tuesday, July 11, 2006

கிராம விஜயம்...

மனைவிக்கு தாலி பிரித்துக் கோர்க்க வேண்டியிருந்ததால் என் மாமியார் வீட்டுக்கு செல்ல வேண்டியிருந்தது. மகளிர் மட்டும் விசேஷம் என்பதால் எனக்கு டிராப்/ பிக்-அப் வேலைதான். அலுவலகத்திற்கும் வீட்டிற்கும் டூரிலும் மாறி மாறி மடிக்கணினியை சுமந்து சென்றும் முடிக்கமுடியாத ஒரு சில கோப்பு வேளைகளை இந்த சந்தடியில் முடித்துவிடலாம் என்று எண்ணி கணினியைக் கொண்டுசென்றேன் (கண்டிப்பாக கிராமத்தில் லேப்டாப்பைக் கொண்டுபோய் ஷோ காண்பிக்க இல்லை! நிறைய பேர் ஊருவிட்டு ஊருபோய் வேலை செய்வதாலும் தயாநிதி சாரின் தொலைதொடர்புத்துறை ஸ்ட்ரேடஜிகளாலும் இன்றைக்கு நகரத்தைவிட மொபைல்போன்/வீடு எண்ணிக்கை கிராமத்தில்தான் அதிகம் இருக்கும் என்று நினைக்கிறேன். எனவே சிறிதுநாட்களில் லேப்டாப்களும் கிராமத்தில் பொதுவாகிவிடும்.) கொண்டு சென்றேனே தவிர கிராமத்தின் இயற்கை சூழல், மாமியார் வீட்டு சொகுசு, மனைவியின் அருகாமை அன்பு இவற்றால் அலுவலக வேலை புரிய மனம் ஓடவில்லை. அதன் விளைவுதான் இந்த ப்ளாக்.

அன்றைக்கு வெயில் இல்லை. மழை வரும்போல ஒரு மந்தமான தட்பவெட்பம். அந்த சென்னை - திண்டிவனம் சாலைத்துண்டில் வண்டி ஓட்ட பிடிக்கும். கிழக்குக் கடற்கரை சாலை போல் வளைந்து நெளிந்து செல்லாமல் வகிடு எடுத்தாற்போல் மலைகள் நடுவில் நேராக ஓடும் சாலை. ஈ.சீ.ஆர் ஒரே லேன். இது மீடியன் பிரிக்கப்பட்ட இரட்டைச் சாலை. பாதுகாப்பும் வேகமும் அதிகம். டென்ஷன் குறைவு. சென்னையைவிட்டு விலக விலக சூழலில் ஆரவாரம் குறைந்து ஆசுவாசம் நிறைகிறது. சென்னை சாலையில் கைக்குட்டை முகமூடிகள், கையுறை கன்னிகளும் மலியக்காரணமான மாசும் தூசும் இங்கு இல்லை. புகை குறைந்தாலே முகங்களில் புன்னகை தெரிகிறது.

என் மனைவிக்கு தான் படித்த எஸ்.ஆர்.எம் காலேஜ் பிடிக்கும். அந்த திருப்பத்தில் உள்ள அம்மன் கோயில் பிடிக்கும். வண்டலூர் பிடிக்கும் - காரணம் பூர்வீகம் அல்ல, அது நாங்கள் முதன் முதலாக சந்தித்த இடம் என்பதால். இந்த சாலையில் செல்வதே அவளுக்கு தனி குஷிதான். திருமணத்திற்கு முன் இதே சாலையில் மறைந்து ஒளிந்து, முக்காடு போட்டுக்கொண்டு பைக்கிலும் காரிலும் சென்ற திருட்டு சவாரிகள் ஞாபகத்திற்கு வரும்போதெல்லாம் மறுபடியும் கொஞ்சம் ரொமாண்டிக்காக என்னைப் பார்த்து அர்த்தத்தோடு சிரிப்பாள்.

செங்கல்பட்டு சோதனைச் சாவடி அருகில் இருசக்கர வாகனத்தில் வரும்போது யூகாலிப்டஸ் மணம் கமழும். காரில் வந்தால் சன்னலை இறக்கிவிட்டுக்கொள்வேன். இன்னொரு புறம் சிறிது தூரத்தில் பரனூர் ரயில் நிலையம் தூரத்தில் ஏதோ ஏரி, சிறிய மலையுடன் ரம்மியமாக காட்சியளிக்கும்.

செக்போஸ்டிலிருந்து செங்கல்பட்டு நகரம் செல்லும் வழியில் வலதுபுறம் சிறு மலைகள். உச்சியில் புதுப்பிக்கப்படும் சிவன் கோயில். சிறிது தூரம் சென்றதும் இடதுபுறம் செங்கல்பட்டு ஏரி. நீர் நிறைந்திருக்கும்போது பார்க்க கண்கொள்ளா காட்சி. படகு வசதி கூட உண்டு. தண்ணீர் காயும்போது பாசி படிந்து ஒரு பெரிய பச்சைக் கம்பளம்போல் இருக்கும்.

செங்கை நகர நெரிசல் தவிர்க்கும் புறவழிச்சாலையில் போகும்போது வலதுபுறம் பாலாறு. இடப்புறம் மலைகள். இரண்டு மலைகளுக்கிடையில் பசுமையான தனிமையான பள்ளத்தாக்கு உண்டு. எனக்கு ரொம்ப பிடித்த இடம். ஒரு நாள் அங்கே மாளிகை இல்லை என்றாலும் ஒரு குடிலாவது போட்டுக்கொண்டு இயற்கை எழிலில் ஆழ்ந்திருக்கவேண்டும்.

செங்கை நகர் தாண்டியதும் மாமண்டூர். மறுபடியும் மலைகள் ஆறு (தண்ணீர் இல்லை). ஆற்றை ஒட்டி மலைகள் (மலையை ஒட்டி ஆறு?) அழகாக இருக்கும். இங்கு மட்டும் சிறிது மூக்கை மூடிக்கொள்ளவேண்டும் - அருகில் ஒரு மதுபான தொழிற்சாலை அடிக்கடி நாற்ற புகையைக் கக்கும். இந்த பாலத்தைத் தாண்டி மாமண்டூர் அ.போ.கழக சாலையோர உணவகம் வரும் வரை ஒருவழிச்சாலை. ஆனால் வழக்கம்போல நம்ம ஊர்க்காரர்கள் திடீரென்று டி.வி.எஸ் 50 அல்லது காரில் எதிர் திசையில் தவறாக வந்து அதிர்ச்சி தருவார்கள், 2 கி.மீ சுற்றி வர பால்மாறிக்கொண்டு.

என் மாமியார் ஊர் செங்கல்பட்டுக்கு அருகில் மதுராந்தக ஏரிக்கரையில் வாகனங்கள் வழுக்கிச்செல்லும் தங்க நாற்சதுர சாலைக்கு 5 கிமீ தூரத்தில் இயற்கை மணம் கமழும் ஒரு கிராமம். பறவைகள் சரணாலயம் வேடந்தாங்கல் ரொம்ப பக்கம்.

அருகிலேயே சிறிய குன்று, மேலே வழக்கம்போல் கோபித்துக்கொண்டு போன முருகர் இல்லை, ரங்கநாதர். சென்னைக்கு அருகிலும் மலைகள் உண்டு. பூவிருந்தவல்லி (அதான்பா, பூனமலீ) - தாம்பரம் புறவழிச்சாலையிலும் மலைகள் சிறு ஏரிகள் குளங்கள் உண்டு. ஆனால் நகரத்தின் புகையின் தாக்கம் லேசாக இருக்கும். பற்றாக்குறைக்கு ஈவு இரக்கமின்றி இயற்கை அன்னையின் எழில்மிகு வளங்களை படிப்படியாக சுரண்டி எடுத்து அடுக்குமாடிக் கட்டடங்களுக்கு அஸ்திவாரமாக்கும் கல்குவாரிகளின் இரைச்சல். (எனக்கு சமீபத்தில் பல்லைப்பிடுங்க ஒரு டிரில்லிங் மெஷின் வைத்து டைல்ஸ் இழைப்பதுபோல் குடைந்த பல்டாக்டர் ஞாபகம் வரும்). குவாரிகளின் கல்துகள்கள் காற்றில் பனிமூட்டம் போல பரவிக் கிடக்கும். டெல்லியின் ஸ்மோக்கின் (smog ) ஊடே வண்டி ஓட்டிச்செல்வது போல் இருக்கும்.

இங்கே எங்கள் ஊர்ப்பக்கம் மாதிரி வாய்க்கால் வழிந்தோடும் நீர் வளம் இல்லை. ஆண்டு முழுதும் பச்சைப் பசேலென்று பயிர்வைத்த கண்ணுக்கெட்டிய தூரம் வரை விரிந்து பரந்த வயல்காடு இல்லை. கிணறு இல்லாதவர்கள் ஒரு போகம் தானாம். கிணறு மோட்டார் உள்ளவர்கள் ஒரு போகம் நெல், மற்ற நேரம் எள், கடலை (ஆகா!), கேழ்வரகு, பச்சைமிளகாய்...

பயிர் வைக்கப்படவில்லை பசுமையாக இல்லை என்றாலும் இந்த கிராமத்து மண்ணும் மனதுக்கு ஒரு சுகம்தான். சிதம்பரம் அருகில் உள்ள என் கிராமத்திற்கு லீவு நாட்களுக்கு சென்ற நினைவுகளை அசைபோட்டுப்பார்க்கிறேன். நான் கிராமத்தில் கழித்த நாட்கள் மிகச் சொற்பமே. அரையாண்டு முழாண்டு தேர்வு விடுமுறைகள், பொங்கல், ஊர்க்கோயில் தேர் - திருஷா (த்ரிஷா இல்லீங்க, திருஷா - திருவிழாவத்தான் ஊர்ல அப்படிச்சொல்வாங்க), மூன்றாம் சனிக்கிழமை படையல், குலதெய்வம் அய்யனார் கோயில் விசேஷம், ஊரில் சொந்த பந்தங்களுக்கு, பங்காளிகள் வீடுகளில் நடைபெறும் நல்லது கெட்டது - இப்படி ஆண்டுக்கு ஒரு இருபது முப்பது நாட்கள் தான். இருப்பினும் நகரத்திலிருந்து கிராமத்துக்கு செல்லும்போது ஏதோ திரும்பி வருவதற்காக ஊருக்கு செல்வதுபோல் தோன்றாது. பஞ்சம் பிழைக்க வெளியூர் / வெளிநாடு சென்று விட்டு மீண்டும் தாயின் அருகாமைக்கு செல்லும் ஒரு நிம்மதி கிடைக்கும்.

மதியம் தாலி பிரித்து கோர்த்தார்கள். பெண்கள் நிகழ்ச்சி. உறவினர்கள், கொண்டான் - கொடுத்தான், பங்காளிகள், அக்கம் பக்கத்தினர் என்று எல்லா வீடுகளிலிருந்தும் சுமங்கலிகள் வந்திருந்தனர். நான் கணினியில் என் நிறுவன தொலைநோக்கு ஆவணத்தை வைத்து உருட்டிக்கொண்டிருந்தேன்.

அந்தி சாயும் நேரத்தில் எனது மைத்துனர் மீன் வாங்கிக்கொண்டு வந்திருந்தார். ஐஸ் வைக்காத மீன் . வஞ்சிரம், வாளை, சங்கரா. நாவில் எச்சில் ஊறியது. வீட்டுக்கு பின்னால் உள்ள அடுப்பில் மீன் வறுக்கப்பட்டது. நான் அடுப்பருகில் அமர்ந்து என் மனைவியின் (புதுமனைவி!) அழகையும் இயற்கை அழகையும் ரசித்துக்கொண்டே இந்த ப்ளாக்கை எழுதிக்கொண்டிருக்கிறேன். உயரத்திலிருந்து விழுந்தாலும் அடிபடாமலிருக்க உருவாக்கப்பட்ட லேப்டாப் பற்றிப்படித்தேன். எச்.பி நிறுவனம் புகைசேர்ந்த அனலுக்கு என் லேப்டாப்பை டிசைன் செய்திருக்குமா தெரியவில்லை.

இதை எழுதிக்கொண்டிருக்கும்போதே தென்னை மரத்திலிருந்து ஒரி சிறிய அழகான பூ கீபோர்டில் விழுந்தது. தென்னம்பூ அழகு. பாளையில் இருக்கும்போது அதன் அமைப்பே தனி அழகு. கேரளத்தில் அப்பாவின் நண்பர் மகள் திருமணத்திற்கு சென்ற போது அங்கே குடத்தில் தென்னம்பாளைகள் அழகாக வைத்திருந்தார்கள். கேரளத்து இயற்கை அழகோடு சேர்ந்து பதிந்த நினைவுகளில் இதுவும் ஒன்று.

கார்பன்டையாக்சைடு கலக்காத இயற்கைக் காற்று காம்பவுண்டு இல்லாத தோட்டத்து வழி தவழ்ந்து வந்துகொண்டிருந்தது.
என் அருமை எம்.டெக் மனைவிக்கு தோட்டத்தில் உள்ள அடுப்பில் விறகும் சருகும் வைத்து சமைக்கப்பிடிக்குமாம். ஒரே சீரான அதி வெப்பத்தில் கேஸில் சமைத்ததைவிட அங்கும் இங்கும் அலைபாயும் தீக்கங்கையும் புகையையும் சமாளித்து கருகிக்கிடந்த தோசைக்கல்லில் கை ஓயாமல் பிரட்டிக்கொண்டே இருந்து வறுத்த மீன் சுவை அலாதி. மீனின் வாசமே பசியை வரவழைத்தது.

சமைத்துக்கொண்டிருக்கும்போதே எனக்கு மட்டும் ஸ்பெஷலாக சாப்பாடு வந்தது. (மருமகன்!).
எழுதும்போது வார்த்தை விரைவு தடைபடாமல் இருக்க மாமியார் செய்த மீன்குழம்போடு தான் வறுத்த மீனை சிறிது சேர்த்து சேர்த்து ஊட்டியவண்ணம் இருக்கிறாள் என் மனைவி.
எழுதித் தருகிறேன், எந்த ஐந்து நட்சத்திர ஓட்டலிலும் வறுத்த மீன் இத்தனை ருசிக்காது. இடையிடையே நான் போதும் போதும் என்று சொல்லிக் கொண்டிருந்ததை அவர்கள் செவிகொடுத்துக் கேட்டாற்போல் இல்லை. வறுத்த மீன் வந்தவண்ணம் இருந்தது.

ஒருவழியாக சாப்பிட்டு முடித்துவிட்டு உள்ளே வந்து முட்டாள்பெட்டியின் முன் அமர்ந்தேன். இவ்வளவு சுகமான கிராமத்தில் நேரத்தை டீவி பார்ப்பதில் செலவழிக்கவேண்டுமா? மலை அடிவாரத்தில் அல்லது ஏரிக்கரையில் காற்றாட நடக்கலாமே. மனம் ஒருபுறம் டீவி வேண்டாம் என்றது. மனம் மறுபுறம் வேண்டும் என்றது. சிகரெட், மது போல், தீது என்று தெரிந்தும் பழக்கத்தின் அடிமையாகி மனதின் அரிப்பைச் சரிசெய்துகொள்ள தம் அடிப்பது போல் கை தானாக ரிமோட்டை நோக்கிச் சென்றது.

கே டிவியில் ஆலிவுட் திரைப்பார்வை ஓடிக்கொண்டிருந்தது. வானர உளவாளி என்ற படத்தை அலசிக்கொண்டிருந்தார்கள். சம்பந்தமே இல்லாத குரல்களில் ஜுனூன் தமிழ் பேசிக்கொண்டிருந்தார்கள் ஆலிவுட் நட்சத்திரங்கள்.இங்கே எல்லாமே இலவச சேனல்தான். நகரத்தில் செட்டாப் பெட்டி வைத்து காசு கட்டினால் மட்டும் வரும் நேஷனல் ஜியோக்ராபிக், எச்.பி.ஓ எல்லாம் தனிக்கட்டணம் இல்லாமலேயே வருகிறது.சேனல் சர்ஃபினேன்.

விஜய்யில் மிர்ச்சி சுச்சி (ரொம்ப ஒல்லி பிச்சி) நெஸ்கபேவுக்காக வாணிஜெயராமுடன் வாயாடிக்கொண்டிருந்தார்.

நேஷனல் ஜியொகிராபிக்கில் ஒரு யானை சேற்றில் விழுந்து எழுந்துவந்து முன்னால் எலி போல் நின்ற ஒரு வரிக்குதிரையை கனைத்து மிரட்டிக்கொண்டிருந்தது. ஜீப்ரா ஒன்றும் பயப்பட்டாற்போல் தெரியவில்லை.

தமிழனில் ஒருவர் 1 பேதுரு 2:11ஐ குறிக்கோள் காட்டி சிற்றின்பத்தை , ஆசையை துன்பத்தைத்துறக்க வழி சொல்லிக்கொண்டிருந்தார்.

ரிமோட் மனைவியின் கையில். அவள் சர்ஃபினாள். சன் மியூசிக்கைத் தாண்டும்போது திரை முழுக்க ஒரு தொப்புள் மட்டும் க்ளோசப்பில் காண்பிக்கப்பட்டுக்கொண்டிருந்தது. சாமுத்திரிகா லட்சணத்தில் ஒரு முடியைக் கொண்டு ரிவர்ஸ் இஞ்சினியரிங் செய்து பெண்ணின் முழு லட்சணத்தையும் அனுமானிக்கமுடியுமாம். எனக்கு சாமுத்ரிகா தெரியாது. எல்லா டைரக்டர்கள்/கேமராமேன்கள் புண்ணியத்தில் நடிகைகளின் கண்கள் க்ளோசப்பை விட தொப்புள்தான் நிறைய பார்த்திருக்கிறேன். விஸ்தாரம், ஆழம், நிறம் புள்ளிவிபரம் வைத்து மன லைப்ரரி ஜோ அல்லது மீனா என்றது.

ழீ (zee என்று z கொண்டு அடித்தால் இப்படித்தான் வருகிறது!) ம்யூசிக்கில் ஜிங்சாக்கான ஒரு வட இந்தியன் வாய் அசைத்துக்கொண்டிருந்தான், பின்னணியில் நம்ம அரிகரன் போலோ போலோ போலோனா என்று சடையை ஆட்டிப் பாடிக்கொண்டிருந்தார்.

சன் மியூசிக்குக்கு திரும்பி வரும்போது மீனா பார்த்திபனோடு ஆடிக்கொண்டிருந்தார். கனகா, மீனா இவர்களிடம் ஒரு பிரச்சினை. யாரோ இவர்கள் கண்கள் அழகு என்று சொல்லியிருப்பார்கள். கொஞ்சம் ஓவராகவே விழிகளை உருட்டி மிரட்டிக்கொண்டிருந்தார். நேற்று பஸ்ஸில் சிக்கி சிக்கி ஓடிய டிவிடியில் வரும்போது விஜய்யோடு 'அறுத்த கோழி வறுத்து வச்சிருக்கேன்' என்று ஒரு ஐட்டம் நம்பரில் ஆடியது நினைவுக்கு வந்தது.

ஜெயா டீவியில் குஷ்பூ ஜாக்பாட்டுக்காக டமில் பேசிக்கொண்டிருந்தார். வந்தாரை வாழவைக்கும் தமிழகம் வட இந்திய குஷ்பூவை வரவேற்று அவர் திறமையை ஆதரித்து கோடீஸ்வரி ஆக்கி, கோயில் எல்லாம் வைத்தது உண்மைதான். அதற்காக பாதிக்கும் மேல் ஆங்கிலம் கலந்தும், மீதமுள்ள 50%ல் பாதி வார்த்தை தமிழ்போல உச்சரிக்கமுடியாதவரை ஏன் தமிழில் நிகழ்ச்சி செய்ய வைக்கவேண்டும்? உடித் (கடித்!) நாராயணை வலிய அழைத்து பாட வைப்பவர்கள் கொஞ்சம் முயன்றால் சரியான உச்சரிப்பு கொண்டு வரமுடியும். ஆஷா போன்ஸ்லே, லதா மங்கேஷ்கர், சுனந்தா எல்லாம் அட்சர சுத்தமாக பாடவில்லையா? நம்ம இளம் இசையமைப்பாளர்களுக்கு வடக்கத்திக்காரர்களை வைத்து தமிழை கொத்து பரோட்டா போடுவது, பேஷன், டிரென்ட்.

குஷ்பூ - ஒரு சிறு கொலைச்சொல்லாக்கம்: கவ்னம், ரஜ்னி என்றால் நினைவுக்கு வர்வது, எத்ன பாயின்ட்ஸ், உப்யோகப்படுத்தும், வெத்லெ எலை... பாராட்ட வேண்டியது அவர் உடல் மொழி, கெஸ்சர்ஸ். டைட்டிலின் போது குஷ்பூவின் தமாஷான செய்கைகள் பாடி கெஸ்சர்ஸ் போட்டுக்காட்டுகிறார்கள். ஜெயா டிவி நிகழ்ச்சித் தரம் வெகுவாக முன்னேறியிருக்கிறது. லொங் நய் டொ கொ (முன்பு அவ்வளவு மோசமாக இருந்தது)

திரும்பி வரும்போது விஜய்யில் அட்ச் கலக்கப்போவது சாம்பியன்களில் சின்னி ஜெயந்த், மதன் பாப் மற்றும் சாம்பியன்கள் கலக்கிக்கொண்டிருந்தார்கள். மனோபாலா அலைகள் ஓய்வதில்லை ஆயிரம் தாமரை பாடல் ஷூட்டிங் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டிருந்தார். வித்தியாசமான நிகழ்ச்சி. பேச்சுத் திறமை கண்டறிதலில் அரட்டை அரங்கம் செய்த புரட்சியை இது நகைச்சுவையில் செய்கிறது.
சன் டிவியில் தங்க வேட்டையில் ரம்யா கிருஷ்ணன் தங்கத்தை அள்ளி வீசிக்கொண்டிருந்தார். தெலுங்கு காரர் என்பதால் தமிழை கொஞ்சமாக கொன்றுகொண்டிருந்தார்.`

டான் தமிழ் ஒளியில் கிரேஸி மோகன் வசனத்தில் அவ்வை சண்முகி கமல் வரிக்கு வரி நொடிக்கு நொடி சிரிக்க வைத்துக்கொண்டிருந்தார்.

உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு என்பார்கள். மயக்கம் டீவி சுவாரஸ்யத்தை மிஞ்சியது. டீவியை அணைத்துவிட்டு கட்டிலைத் தவிர்த்துவிட்டு தரையில் படுத்து ஒரு குட்டித்தூக்கம் போட்டேன்.

கண்விழித்துப் பார்த்தபோது என் மனைவி வெள்ளை நிற சாதிமல்லியும் (சென்னையில் ஊதா கலந்த சாதிமல்லி பார்த்திருக்கிறேன்) கொஞ்சம் முல்லைப் பூவும் சேர்த்து கட்டிக் கொண்டிருந்தாள்.

இரவு அங்கேயே தங்கிவிட்டு காலை எழுந்து சென்னைக்குக் கிளம்பினோம். கண் விழிக்கும்போதே கசந்தது. சென்னை நகரத்துக்கு திரும்பிச் செல்லவேண்டும் என்று நினைக்கும்போதே மனது வரமாட்டேன் போ என்று கீழே விழுந்து பிரண்டு அடம் பிடித்தது. கிராமத்து மண்ணின் காற்றின் தூய்மை, மக்களின் மாசற்ற அன்பு, உபசரிப்பு இவை ஏதும் இல்லாமல் நாள் முழுதும், வாழ்க்கை முழுதும் வேலை செய்யும் நகரம். பிஸினஸ், பணம் என்று ஓடி ஓடி ஓவர்டைம் உழைத்து, உழைத்துச் சோர்ந்து ஓடாய்த் தேய்ந்து, ரிடையர் ஆனபின்பும் பார்ட்-டைம் பார்க்கும் நகரம். மரணத்துக்கு 5 நிமிஷம் முன்பாவது எதற்காக இவ்வளவு வேகமாக ஓடினோம் என்று தோன்றுமோ தெரியவில்லை. மாசுபடிந்த காற்று, மனிதம் இழந்த முகங்கள். நினைத்தாலே வெறுப்பு வந்தது. நீருக்குள் போகும்போது உள்ளிழுத்துக்கொள்வதுபோல நீண்ட மூச்சு இழுத்து நிறைய ஆக்ஸிஜன் சுவாசித்துக்கொள்ளவேண்டும் போல் இருந்தது. அடிக்கடி வாங்க, எப்போ வருவீங்க என்று அன்பாக உபசரனையோடு கேட்ட மனங்களை அந்த நாட்டுப்புற முக பிம்பங்களை மூளையின் நினைவறைகளில் சேமித்து வைத்துக்கொள்ளத் தோன்றியது. நகரத்தின் அவசரத்தில் வேலையின் துரிதகதியில் ஓரிரு வினாடிகள் கிடைத்தால் ஸ்கிரீன்ஸேவர் மாதிரி கிராமத்துக் காட்சிகளையும் முகங்களையும் ஸ்லைட்ஷோ போட்டுப் பார்த்துக்கொள்ளலாம்!

சென்னை நெருங்க நெருங்க மனதில் கிராமத்தின் ரம்மிய நினைவுகள் ஃபேட் அவுட் ஆகி, நரகத்தின், ஊப்ஸ், நகரத்தின் கொடுமைகள் ஊடுருவத் தொடங்கின... மின்சார ரயிலைப் பிடிக்க அவசர நடை, ரயிலிலிருந்து இறங்கி வீட்டுக்கு செல்லும்போதும் நடையில் வேகம். லிஃப்டுக்கு இரண்டு நிமிடம் நிற்கக் கூட முடியாமல் காலை மாற்றி மாற்றி நிற்கும், ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொள்ளாமல் விட்டத்தையும் லிஃப்ட் இண்டிகேட்டரையும் மாறி மாறி பார்த்து ம்ச் ம்ச் என்று முனகிக்கொள்ளும் பொறுமையின்மை. சிக்னலில் பிச்சைக்காரனையும் பொம்மையும் ஆரஞ்சு நிற சாஃப்ட் கிளாத்தும் விற்கும் குழந்தையையும் பார்க்கத்தவிர்த்து 15 வரும்போதே இஞ்ச் இஞ்ச்சாக முன்னேறிச் சென்று 5 வந்ததுமே சல்லென்று பறக்கும் அவசரம். பீச்சில் காற்றுவாங்க அரை மணி நேரம் போனாலும், கவுண்ட் டவுன் போல அரைமணி எப்பொழுது முடியும் என்று நிமிடத்துக்கொருமுறை மணிக்கட்டையோ செல்போனையோ பார்த்துக்கொள்ளும் பரிதவிப்பு (இடையிடையே ஏய், தண்ணியில கால் வைக்காதே! அங்க மணல்ல உட்காராதே இங்க வந்து சிமென்ட் தரைல உட்கார்!). மருத்துவரோ, பிசியோதெரபிஸ்டோ, டீவியிலோ, நண்பரோ கொடுத்த அட்வைஸ் படி, வராத நோயை எண்ணிக் கலங்கி, பார்க்கில் வாக்கிங்குக்காக வந்து, மரங்களை, மலர்களை, சிட்டுக்குருவிகளை, பச்சைக்கிளிகளை, குயில்களை ரசிக்க நேரமின்றி மூச்சுவாங்க வாங்க கடனே என்று ஐந்து சுற்று சுற்றிவிட்டு போகும் 'தொலைநோக்கு'.

நகரத்தை நெருங்கினோம். தாம்பரம் உள்ளே நுழைந்ததும் ஆரவாரம், சிக்னல், புகை, மாமூல், பல்லவன், குரோம்பேட் ரசாயன நெடி, கட்டப்பட்டுவரும் மேம்பாலத்தால் டிராஃபிக் நெரிசல், ரயில் நிலையங்களின் அருகில் சாலையில் ஒலிம்பிக்கில் ஓடத்தயாராக இருப்பதுபோல் மக்கள், மின்சார ரயிலில் மக்கள், ரங்கனாதன் தெருவில் மக்கள், தியேட்டரில் மக்கள், என மக்கள் மக்கள் மக்கள். தறிகெட்டு வெறிகொண்டு ஓடும் தண்ணீர் லாரிகள், பின்புறங்கள் பிதுங்கி நிறைந்து ஓடும் ஷேர் ஆட்டோக்கள், தொங்கும் பயணிகளைப் பொருட்படுத்தாமல் பறக்கும் பல்லவன்கள், இஞ்சினீயரிங் காலேஜ் பஸ்கள், இன்போசிஸ் யுண்டாய் என நிறுவனங்களின் பஸ்கள், மினரல் வாட்டர் டெலிவரி டெம்போக்கள், வேன்கள், விதவிதமான 100சிசி பைக்குகள், சைக்கிள்கள், என வாகனங்கள். வாகனங்கள் வாகனங்கள். வந்துவிட்டேன் சென்னையே உன்னிடம். இனி இன்னொரு முறை சொந்த ஊருக்கோ மாமியார் ஊருக்கோ போகும்வரை உன் மடியில், உன் கொடூரங்களின் பிடியில் நான்.

பி.கு.: நகரத்தின் அவசரகதி நிகழ்ச்சிநிரலில் 5 நாட்கள் கழிந்தும் ஒரு வாரம் முன்பு எழுதிய இதை பிழைதிருத்த சிறிது நேரம் கிடைக்கவில்லை. இனியும் தாமதிக்கவேண்டாம் என தயவு தாட்சண்யம் பார்க்காமல் அப்படியே நகல் - ஒட்டு போட்டு இந்த வலைப்பூவை ஆக்கிவிட்டேன். பிழைகளை மன்னிக்கவும்.

Tuesday, June 06, 2006

தூ!க்ளக் - சோவுக்கு அர்ச்சனை...

கோயில்களில் எல்லா பிரிவினரும் அர்ச்சகர்களாகலாம் என்ற தமிழக அரசின் ஆணைக்கு எதிர்வாதம் செய்து எழுதியிருந்த கட்டுரையைப் படிக்க நேர்ந்தது. துக்ளக் என்றால் நடுநிலையாக நின்று ஒரு பிரசினையை அலசும் பத்திரிகை என்ற எண்ணத்தைப் போக்குவதாக அமைந்திருந்தது. வாதத்துக்காக சொல்கிறேன் பேர்வழி என்று கண்மண் தெரியாமல் கருத்துக்களை அள்ளி வீசியிருந்தார் வாத்யார் (= ஆசிரியர்).

ஏற்கனவே நிறைய முறை சாதீயத்தை ஆதரிக்கும் வண்ணம் பேசி, நடந்துகொண்டு தான் ஒரு படித்த ஆதிவாசி என்பதைக் காண்பித்திருக்கிறார் சோ. இப்போது அதை நிரூபித்திருக்கிறார். சப்பைக்கட்டுக்கு ஆகமம். அரசியலிலும் வெளிப்படையாக திமுகவை சாடும் இவர் நடுநிலை என்று சொல்லிக்கொண்டு பெரும்பாலும் ஜெயலலிதாவுக்கு பங்கம், பாதிப்பு வராமல்தான் எழுதுவார் பேசுவார். போர்த்தியிருக்கும் பசுத்தோலை எடுத்தால் தெரியவரும் ஏனென்று.

பத்திரிகையாளர் என்ற கடமையையும் தாண்டி பிராமணன் என்ற அகம்பாவமும் (மற்றவர்களைவிட உசத்தி என்று கருதிக்கொள்வதால்) தங்களுக்கென்று பிடித்துவைத்திருக்கும் ஒரு இடத்தை பிறர் ஆக்கிரமித்துவிடுவார்கள் என்ற பயமும் தெளிவாகத் தெரிகிறது. அவர் சொல்வது போல் அர்ச்சகர் வேலை எண்ணிக்கை குறைவாக இருக்கலாம், சம்பளம் பிரமாதமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் சமூகத்தில் இவர்கள் சொல்லுக்கு உயர் மதிப்பு இருப்பது மூலவறைக்குள் இவர்கள் மட்டுமே இருப்பதால் இவர்கள் சொல்வதைத்தான் கடவுளே கேட்கிறார் என்பதுபோன்ற ஒரு மாயையை உருவாக்கி வைத்திருப்பதால்தான். அதுசரி, எங்கும் நிறை பரப்ரும்மத்துக்கு சமஸ்கிருதம் தான் புரியுமா? சராசரித் தமிழன் பேசும் சரளத்தமிழ் புரியாதா? தமிழனுக்கும் கடவுளுக்கும் இடையில் துபாஷ் வேலை பார்ப்பதாகவும் மந்திரம் என்ற பெயரிலும் முறையான வழிபாடு என்ற பெயரிலும் ஊரை ஏமாற்றி வந்தவர்களுக்கு இது ஒரு சாட்டையடி தான். அதனால்தான் துடிக்கிறது துக்ளக்கின் மீசை.

சில கோயில்களில் கொளுத்தும் வெயிலில் வெறும் காலில் நடந்து, பசி தூக்கம் பாராது கோயிலுக்கு வந்து பக்தியுடன் பாடும் (பிராமணரல்லாத) பண்டாரங்களை ஏளனமாக பார்ப்பதையும், யோவ், ஓரமா நில்லய்யா! என்று ஒதுக்கிவிட்டுப் போவதையும் பார்த்தால் வேதனையாக வரும், அதைத் தாண்டி 'நாங்கள் பாடினால் தான் நடராஜர் வருவார்' என்ற இவர்களின் மமதை வெறுப்பைவிட சிரிப்பைத்தான் வரவழைக்கும். துக்ளக்கின் கட்டுரையும் அந்த தொனியில் தான் அமைந்துள்ளது.

கட்டுரையில் சில நக்கல்கள்:
... நாளை ஒரு அரசு 'அனைத்து மதத்தினரும் அர்ச்சகர் ஆகலாம்' என்று ஏன் உத்தரவிட முடியாது? .. பிற மதத்துக்காரர் ஒருவர் அர்ச்சகர் ஆக பணிபுரிய விரும்பி, அதற்கான பயிற்சியைப் பெற்று, அர்ச்சகர் ஆகி கோவில் பணி முடிந்தவுடன், தன் சொந்த மதத்தின் வழிபாடுகளை நடத்திக் கொள்ளலாமே?...
.. நாளையே ஒரு அரசு, கோவில் அர்ச்சகர்கள் திறந்த மார்புடன், கச்சம் வைத்த வேட்டியைக் கட்டிக்கொண்டு அர்ச்சனை செய்வது அநாகரிகமாக இருக்கிறது, இது இன்டீஸன்ட் எக்ஸ்போஷர், அதனால் இனி அர்ச்சகர்கள் பாண்ட், ஷர்ட் அணிந்துதான் அர்ச்சனை செய்வார்கள் என்று உத்திரவிடமுடியாதா...
.. கோவிலில் நைவேத்யமாகப் படைப்பது, அசைவ உணவு சாப்பிடுபவர்களை இழிவுபடுத்துவதாக இருக்கிறது. அதனால் இனி எல்லா கோவில்களிலும் அசைவ உணவு நைவேத்யம் செய்யப்படலாம். .. சிக்கன் மட்டன் கருவாடு போன்றவையும் தெய்வங்களுக்கு நைவேத்யம் செய்யப்படலாம்..
.. பெண்களும் அர்ச்சகர்கள் ஆகலாமே? சரிநிகர் சமானம் என்ற நாகரிக உலகில் ஆண்கள்தான் அர்ச்சகர்கள் ஆக முடியும் என்பது கொடுமை அல்லவா.. முழுவதும் இல்லாவிட்டாலும் 33% அர்ச்சகர்கள் (இட ஒதுக்கீட்டை கிண்டல் செய்கிறாராம்!) பெண்களாகத் தான் இருக்கவேண்டும்.. இன்னும் கொஞ்சம் புரட்சி செய்யலாம். மாதவிலக்கு நாட்களிலும் அந்த அர்ச்சகிகள் கோவிலில் அர்ச்சனை செய்யலாம்...
சில புலம்பல்கள்:
...ஆகமங்களை மாற்றுகிற உரிமை யாருக்கு இருக்கிறது. (இந்த ஆகமத்தின் பெயரை வைத்து தானய்யா ஊரை ஏமாற்றிக்கொண்டிருந்தீர்கள்), ஆத்திகர்களுக்கே, ஆச்ச்சார்யர்களுக்கே அந்த உரிமை கிடையாது (மாற்றவேண்டாம் என்பதற்காக. வசதியாக பூட்டிவிட்டு, தோபார் என் கிட்டகூட சாவி இல்லை என டபாய்ப்பது!). இந்த மாதிரி மாற்றங்களைச் செய்ய ஒரு மதச்சார்பற்ற அரது முனைவது, (நீதியைச் சொல்ல மதச்சார்புள்ள அரசு தான் வரவேண்டுமா? மதச்சார்புடைய, மதச்சார்பற்ற, வேறு மதச்சார்புடைய அரசு வந்தாலும் அந்த அரசுக்கு அந்த உரிமையும், கடமையும் இருக்கிறது) அரசியல் சட்ட விரோதமானது. ஆத்திகத்துக்கு எதிரானது.
இன்னொரு ஜோக்:
(அப்படி ஆகமத்தில்) சில மாற்றங்களைச் செய்யவேண்டும் என்றால், அது மதத் தலைவர்கள், ஆச்சார்யர்கள் போன்றவர்களால் எடுத்துக்கூறப்பட்டு, ஆத்திக சமூகம் ஏற்று பின்னர் வரலாம். (வர்ணாசிரமம் என்ற கொடுமையை கடவுள் பேராலும் ஆகமத்தின் பேராலும் சமூகத்தில் திணித்த இவர் மறுபடியும் அல்வா கிண்டி கொடுப்பாராம். சமுதாயம் வாங்கி வாயில் போட்டுக்கொண்டு ஙே என்று போக வேண்டுமாம்)

இன்று காலை சன் டிவி வணக்கம் தமிழகத்தில் தென்கச்சி சுவாமிநாதன் ஒரு கதை சொன்னார். முனிவர் ஒருவர் கடவுளைக் காண விழைந்து காட்டில் ஊண் உறக்கமின்றி தவம் இருந்தார். இவர் கடுந்தவம் கண்ட கள்ளங்கபடமற்ற வேடன் ஒருவன் வந்து இவரை எழுப்பி ஏன் இப்படி உடலை வருத்தி உட்கார்ந்திருக்கிறீர்கள் என்று வினவுகிறான். 'கடவுளைக்காண தவம் இருக்கிறேன் என்கிறார் முனிவர் தவம் கலைந்த கோபத்துடன் . இவர் உடல்வருத்தி தவம் கிடப்பது கடவுளைக் காண என்றால், கடவுளைக் கொண்டுவந்து இவரிடம் காட்டிவிட்டால் இவர் தவத்தை விட்டுவிடுவாரே. 'கடவுள் எப்படி இருப்பார் சாமி? இந்த காட்டில் எனக்குத் தெரியாமல் யாரும் இல்லை. எனக்குத்தெரியாத இடமும் இல்லை. எங்கிருந்தாலும் கூட்டிவருகிறேன் உங்களிடத்தில்' என்கிறான் வேடன். கடவுள் என்பவர் அரூபமாக எங்கும் நிறை பரப்ரும்மம், மனதை அடக்கி மாதவம் கிடந்தும் சிலரே காணப்பெற்றவர் என்பதெல்லாம் இவனுக்குத் தெரியாது. தவத்தை தொந்திரவு செய்யும் வேடனை அப்புறப்படுத்தி வைத்திருக்க எண்ணிய முனிவர், கடவுள் சிங்க முகமும், நர சரீரமும் கொண்டவர். முடிந்தால் போய் அழைத்துவா என்கிறார். அவன் போனவுடன் ஏளனமாக சிரித்துக்கொண்டே கடவுளை நினைத்து தவத்தைத் தொடர்கிறார். முனிவருக்காக (கவனிக்கவும், முனிவருக்காக, இவன் காண்பதற்கோ, பொன் பொருள், போகம், சித்தி முக்தி கேட்பதற்கோ இல்லை) கடவுளைத் தேடி பசி தூக்கமின்றி காடெங்கும் அலைகிறான் வேடன். சிலநாட்கள் கழிந்தன. திடீரென ஒருநாள் சிங்கமுக-மனித உடல் கொண்ட அந்த கடவுளைக் கண்ணுறும் வேடன் அப்படியே செடிகொடிகளைக் கொண்டு அவரைக் கட்டி இழுத்துச்செல்கிறான் முனிவரிடம். 'சாமீ, இந்தாங்க நீங்க கேட்ட கடவுள்!'. முனிவருக்கு வெறும் செடிகொடிதான் கண்ணுக்குத் தெரிகிறது. கடவுள் இருந்த இடம் வெற்றிடமாகத் தெரிகிறது. வந்திருப்பது இறைதான் என்று தெரிந்துகொண்ட முனிவருக்கு வருத்தம். கடவுளிடம் கேட்கிறார் 'முறைப்படி வழிபட்டு, கடுந்தவம் கிடக்கும் எனக்கு காட்சி அளிக்காமல், புலால் உண்ணும் இவன், தவம் ஏதும் புரியாமல் உங்களைத்தேடியதும் எளிதில் காட்சியளித்தது முறையோ?. இறைவன் முனிவருக்கு (சோவுக்கும் சேர்த்து) சொல்கிறார்: நீ முறைப்படி வழிபட்டாய், ஆனால் அதில் பொருளாசை இல்லையென்றாலும் சுயநலம் இருந்தது. உன் சிரத்தையைவிட இவன் உனக்காக உள்ளம் பதைபதைத்து உடல் வருத்தி தேடியது எம் மனத்தை உருக்கியது. எனவே காட்சியளித்தோம்'.

இறைவனுக்கு இறைச்சி படைத்தவனும் சிவாச்சாரியார் அல்லன் , ஆனால் இறைவன் அவனை அரவணைத்து ஆட்கொள்ளவில்லையா?

தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த நந்தனார் தில்லையில் மார்கழி தரிசனம் காண ஏதுவாய் சிவபெருமான் அவருக்காக இரவில் வயல்வேலைகளை முடித்து வகை செய்ததும், தரிசனம் காண வந்த நந்தனை அந்தணர் அனுமதிக்காததால் நந்தியை விலகி வழிவிடச்சொன்னதும், அன்றிலிருந்து நந்தனாருக்கு நாயன்மாராக போற்றப்பட்டதும் சரித்திரம் இல்லையா?

எல்லா மதத்தினரும் அர்ச்சகரானால் மக்கள் கோயிலுக்கு போவார்கள் ஆனால் அர்ச்சனை செய்யாமல் திரும்பி வந்துவிடுவார்கள் என்று எல்லார் சார்பிலும் சொல்ல இவர் என்ன வக்காலத்தா? பொதுமக்கள் அப்படி அமைதியாக இருந்துவிடக்கூடாது என்று அவர்களைத் தூண்டிவிடும் பொருட்டு, தாழ்த்தப்பட்டவர்களை அர்ச்சர்கள் ஆக்கினால் பிராமணரல்லாத மற்ற சமூகத்தினர் அதை ஏற்பார்களா? (உன் சாதிசனம் நிறைய பேர் முந்தையவர்களின் தவற்றை உணர்ந்து பெருந்தன்மையாக சமநோக்கு பாராட்டும் இந்நாளிலும், உமக்கு மட்டும் பிரித்தாளும் புத்தி போகவில்லையேய்யா. பரிணாமத்தில் இப்படி பின்னோக்கியும் போகமுடியுமா?) என்று ஒரு போடு போட்டிருக்கிறார். தலித் உரிமை என்று போட்டா போட்டி போட்டுக்கொண்டு ஓட்டு பெட்டி குலுக்கிக்கொண்டு வந்த திருமாவும் மருத்துவரும் இதைப் பார்த்துக்கொண்டு சும்மாதான் இருக்கிறார்கள்.

இவர் சொல்வதுபோல் அமைதியாக ஒரு தீர்ப்பை ஏற்றுக்கொண்டு அடங்கிப்போவது அவாளில்லை, இவர்கள் தான். இட ஒதுக்கீட்டை எதிர்த்து அமைதியானவர்கள் போட்ட சத்தம் எல்லா சேனலிலும் கேட்கவில்லையா?

(ஊடகங்கள் இந்த விஷயத்தில் நடுநிலையில் இருந்தனவா? இந்தச் சுட்டிகளைப் பார்க்க
http://www.hindu.com/2006/06/05/stories/2006060504981400.htm
"Upper castes dominate national media, says survey. No Dalit or Adivasi among top 300 journalists" - http://www.hindu.com/2006/06/05/stories/2006060505181002.htm)

கொஞ்சம் விட்டால் அரசு பெண்களைக்கூட அமர்த்தும் போலிருக்கிறதே என அங்கலாய்க்கிறார். என்ன தவறு? இவர் கூறும் 'முறைப்படி கடவுளை வழிபடக் கற்றவர்கள்' என்ற தகுதி இருந்தால் பெண்கள் ஏன் அர்ச்சகராகக் கூடாது? கடவுளை நினைந்து நினைந்து கசிந்துருகி இறையைக் காணப்பெற்ற ஔவை, காரைக்கால் அம்மையார், ஆண்டாள் எல்லாம் பெண்கள் இல்லையா? பக்தியிலும் சிரத்தையிலும் எந்த விதத்தில் குறைந்தவர்கள் பெண்கள்? அந்த மூன்று நாட்களைத் தவிர உடலளவிலும் சுத்தமானவர்கள் தானே? (இயற்கை இறை தந்தது. அப்படிப் பார்க்கப்போனால் அந்த நாட்களிலும் அவர்களை ஒதுக்கி வைப்பது தவறு. சரி சுத்தம் இல்லை என்றாலும் சுகாதாரம் கருதி அந்த மூன்று நாட்கள் தவிர்த்துவிடுவோம். மற்ற நாட்களில் வரலாமே? பெண்கள் அர்ச்சகர்களாகக்கூடாது, மூலவறையில் வரத் தகுதியற்றவர்கள் என்று மூர்க்கத்தனமாக பேசும் சோவை ஈன்றவளும் ஒரு பெண்தான் என்பதை மறந்துவிட்டு பேசுகிறார். பெண்ணையே தெய்வமாக வணங்கிய இந்த மண்ணில் இவரெல்லாம் பெண்ணை இழித்து ஒதுக்கி எழுதுவதைக் எதிர்த்துக் கேட்கக்கூட ஆளில்லை! )

கொஞ்சம் விட்டால் வேறு மதத்தினரைக் கூட அர்ச்சகர்களாக அனுமதிப்பார்கள் என்று ஏளனம் பேசுகிறார்? ஏன் அனுமதிக்கக்கூடாதுன்னேன்? இந்து மதத்தின்மேல் நம்பிக்கையும் இறைபால் சிரத்தையும் இருந்தால் பார்த்தசாரதியும், பக்கிரியும் அபிரகாமும் இப்ராகிமும் அர்ச்சகராவதற்கு சமதகுதி பெற்றவர்கள். இங்கு மட்டும் ஏனய்யா கோட்டாவுக்கு கொடிபிடிக்கிறீர்?

எல்லா பிராமணர்களுக்கு எதிராகவும் என்று இதை எழுதவில்லை. மாறிவரும் உலகத்தில் நூற்றாண்டுகளாக சாதிகளின் பேரில் நடந்த ஆதிக்கம் முடிவுக்கு வந்து சமநிலை வரும் நேரத்தில், இறைவன், பேய்-பிசாசு என்ற பக்தி/பயத்தின் அடிப்படையில் நடந்துவந்த பழைய மூடத்தனங்களும், வழிவழியாக பரம்பரை பரம்பரையாக சிலருக்கு வந்த சிறப்பு உரிமைகளும், சிலர் மீது பிறப்பால் திணிக்கப்பட்டிருந்த உரிமைமீறல்களும் தகர்க்கப்படவேண்டிய தருணம் இது என்பதைப் புரிந்துகொண்டு சமநோக்கை பெருந்தன்மையுடன் ஆதரிக்கும் நிறைய பிராமண நண்பர்களைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள். இதை ஒப்புக்கொள்ள மனமில்லாததோடு, அதை வெட்கமில்லாமல் கையில் கிடைத்த மீடியாவில் ஏதோ ஆதாரங்களுடன் கூடிய ஆராய்ச்சிக் கட்டுரை போல எழுதி ஷோ காண்பிக்கும் சில சோக்களுக்குத் தான் இந்த இடுகை.

நேரம் கிடைத்தால் 7.6.2006 தேதியிட்ட துக்ளக்கை வாங்கிப்படியுங்கள். ஒரே டமாசு.

Saturday, April 22, 2006

இளையராஜா இலவசம்!

இன்றைக்கு இளையராஜாவின் 'ஒன் மேன் ஷோ' என்ற இசைக்கச்சேரி நடைபெற உள்ளது, ராயப்பேட்டை வெஸ்லி கிரவுண்டில். ஒரு நூறு ரூபாய் டிக்கெட் வாங்கி வைத்துள்ளேன். இளையராஜா லைவ்வாக கேட்கப்போகிறேன் என்று நினைக்கும்போதே சிலிர்க்கிறது.
ராஜாவின் திரை இசையை தாலாட்டு கேட்டு வளர்ந்தவர்கள் நாம். கர்நாடக சங்கீதம் படித்தவர்கள் நிறையப்பேர் 'ராஜா ஒன்றும் கர்நாடக இசை மேதைகளைப்போல் பிரமாதமான இசைக்காவியங்களைத் தந்துவிடவில்லை' என்று சொல்லக்கேட்டிருக்கிறேன். உண்மையாக இருக்கலாம். (நமக்கும் கர்நாடக இசை புரியாதுங்கோவ்.) ஆனால் சராசரித் தமிழனைப் போய்ச்சேரும் திரை இசையில் ஒரு பொற்காலம் ராஜா.
சரி. இந்த ப்ளாக்கின் நோக்கம் ராஜாவுக்கு புகழாரம் சூட்டுவதோ, இளையராஜா சிறந்தவரா என்று வாதம் செய்வதோ அல்ல.
பாமரனுக்கும் இசை போய்ச்சேரச் செய்த இளையராஜா இசைக்கச்சேரியைக் கேட்க நான், 100, 200, 500, 1000, 2000 ரூபாய் டிக்கட் வாங்குமளவு பணக்காரனாகத்தான் இருக்கவேண்டுமா? எத்தனை சராசரித் தொழிலாளர்கள், வேலையில்லாதவர்கள், சிறு வேலைகளில் இருப்பவர்கள் 100 ரூபாய் கச்சேரிக்கு செலவு செய்ய இயலும்.
இந்த எண்ணத்தின் விஸ்தரிப்புதான் 'இளையராஜா இலவசம்' கச்சேரி யோசனை. இளையராஜா ஏன் ஒரு இலவச கச்சேரி நடத்தக்கூடாது? அப்படி நடத்தினால் வரும் மக்களின் எண்ணிக்கையை நினைக்கும்போது, கோக், பெப்சி போன்ற கம்பனிகள் அதை ஸ்பான்சர் செய்தால் வரும் தொகை ஏற்பாடுகளுக்கு ஆகும் செலவுகள் தாராளமாக போதும்.
கருத்துகள்? அல்லது கைகோர்க்க விரும்புபவர்கள்?

Tuesday, April 18, 2006

நிறம் மாறும் பூக்கள் (அல்லது, இக்கரைக்கு அக்கரை பச்சை)

விஜய டி.ராஜேந்தர் மீண்டும் திமுகவில். சரத்-ராதிகா அதிமுகவில். இவர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன். வசை பாடிய அதே வாயால் வாழ்த்துப்பாடும் பச்சோந்தித்தனத்துக்கு எந்த சப்பைக்கட்டு வேண்டுமானால் கட்டுங்கள். ஆனால், இதே களத்தில் மைக் பிடித்து நின்று போன தேர்தலில் சார்ந்திருந்த கட்சியை சாடிப் பேசுவதை சந்தர்ப்பவாதம் என்று மக்கள் தெளிவாக அடையாளம் கண்டே தீருவார்கள்.

ஒரு வேளை நீங்கள் விட்டு வந்த கட்சிக்கு சில மார்க்குகள் குறையுமே தவிர, நீங்கள் போடப்போகும் புது வேஷத்துக்கும், புது கோஷத்துக்கும் உங்கள் புது கட்சிக்கு மக்கள் மார்க் போட மாட்டார்கள்.

எனவே மாற்றுக் கரை வேட்டியை கட்டுமுன் மனசாட்சியைத் துறப்பதுடன் மானத்தையும் துறந்துவிடுகிறீர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.

Tuesday, April 04, 2006

அனுபவ முத்துக்கள்...

எனது வாடிக்கையாளர் ஒருவரை பார்க்கச் சென்றிருந்தோம். வயதில் மூத்தவர். சிறந்த அனுபவசாலி. பேசப் பேச கேட்டுக்கொண்டே இருக்கலாம். தகவல் பொக்கிஷம். ஒவ்வொருமுறை அவரிடம் பேசிவிட்டு வரும்போதும் ஆகா எவ்வளவு விஷயம் தெரிந்து வைத்திருக்கிறார், என்று தோன்றும்.
தனது பள்ளிப்பருவம் பற்றி, அரசியல் அனுபவம் பற்றி, தொழில் தொடங்கி கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தது பற்றி, ஆன்மிகம் பற்றி என அவர் தொடாத தலைப்புக்களே இல்லை எனலாம். சிறந்த நினைவாற்றல், கூர்ந்த கவனம், பகுத்தறிதல் என அவரது அனுபவத்துக்கு பல பரிமாணங்கள் உண்டு.
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம். அவர் சொன்னதை எல்லாம் இனி வலையிலே வரையப்போகிறேன்...
இன்றைய சந்திப்பில் ...
இயற்கையில் கிடைக்கும், மற்றும் நமது கலாச்சாரத்தின் பல அன்றாட செயல்களில் பொதிந்திருக்கும் மருத்துவ மணிகளைப் பற்றி சொன்னார்.
வீடு மெழுக சாணமும், மஞ்சளும் சேர்ப்பது மண்ணுக்கடியிலிருந்து எறும்புகள், பூச்சிகள் வருவதை தடுக்குமாம். சாணத்துக்கு கதிரியக்கங்களைக்கூட தடுக்கும் சக்தி உண்டாம். புற்றுநோய் தாக்கம் முன்னாளில் குறைந்திருந்ததற்கு இதுவும் காரணமாம்.
தரைக்கும் சுவர்களுக்கும் இடையில் மூலைகளில் செம்மண் சாந்து பூசுவது எறும்பைத் தவிர்க்குமாம்.
மகிழம்பூ மணத்தில் கட்டப்பட்டிருக்கும் மாடு கன்று போடுவதற்கான வாய்ப்புகள் அதிகமாம்.
துளசி மாடத்தில் தீபம் ஏற்றி சுற்றிவரும் மங்கையரை மலட்டுத்தன்மை அண்டுவதில்லையாம். தீபப்புகை மற்றும் துளசி மணம் இது இரண்டும் சேர்ந்து செய்யும் மாயமாம் இது.
ஏகாதசி அன்று சாப்பாட்டில் அகத்திக்கீரை இருக்குமாம். அதற்கும் கிருமிநாசனி குணம் உண்டாம்.
பாய் போட்டு படுத்து, தலைக்கு மனை வைத்துகொண்டால் நல்லதாம். தலைக்கு உயர்ந்த தலையனையை விட சிறிய தலையனை அல்லது மணிக்கட்டு இதுவே நலமாம். ஆண்டுக்கொருமுறை பேதி மருந்து, மாதம் ஒருமுறை உடலுறவு, வாரம் ஒருமுறை எண்ணெய்க் குளியல் இதெல்லாம் நல்லதாம்.
உயிர் எங்கே இருக்கிறது என்ற பேச்சு வந்தது. ஆண்களுக்கு உயிர் ஏழு நிலைகளில் இருக்கிறதாம். சராசரி மனிதனுக்கு உயிர் ஆணுறுப்பு பகுதியில் (அருகில்?) இருக்கிறதாம். அது தவிர வயிற்றுப்பகுதியில் மூன்று நிலைகள், இதயம், நாசி, நெற்றி, உச்சந்தலை (சரியாக எழுதினேனா தெரியவில்லை) என்று மொத்தம் 7 நிலைகள். சித்தர்களுக்கு உயிர் உச்சந்தலையிலிருந்து பிரியுமாம்.
இன்னும் நிறைய சொன்னார்...
இதுபோன்ற விஷயங்கள் அறிந்துகொள்ள எதாவது வலைமனை இருக்கிறதா என்று பார்க்கவேண்டும்.

கடமை... கட்டுப்பாடு...

தேர்ந்த அரசியல் பார்வையாளனாக இல்லாவிட்டாலும் வைகோவின் பேச்சுக்களை நிறைய முறை கேட்டிருக்கிறேன். ப.சிதம்பரம் வரிசையில், உருப்படியான, நிலையான சிந்தனை உள்ள, பண்பட்ட sensible அரசியல்வாதி என்று மனதுக்குள் பாராட்டியிருக்கிறேன்.
டிவியில் சேனல் உலாவும்போது ஜெயா டிவியில் வைகோவின் 'இரும்புத்திரை ரகசியங்கள்' பார்க்க நேரிட்டது. கருணாநிதி, தயாநிதி மாறன் இவர்களைச் சரமாரியாக அவன் - இவன் என்ற ரீதியில் சாடிக்கொண்டிருந்தார். அவர் சொன்னது உண்மையா பொய்யா என்பதல்ல எனது வாதம். வெற்றிக் கூட்டணியில் இருப்பதாகக் கூறிக்கொள்ளும் அவர் இவ்வளவு desperation காண்பிக்க வேண்டியதில்லை. ஓரளவு கண்ணியமாக பேசியிருந்தால் நாள பின்ன (அந்தம்மா வேலை முடிந்து கழட்டி விட்டதும்) வீதியில் கவுரதையோடு நடமாட ஏதுவாக இருக்கும். அதற்காக இப்படியெல்லாம் பேசியவர் பின்னாளில் திமுகவில் சேருவது சாத்தியமில்லை என்றும் சொல்லமுடியாது. அரசியல்வாதி நாக்குக்குத்தான் நரம்பில்லையே.
சரி, இவர் கூறியிருப்பது போல் அட்டூழியங்களையே தயாநிதி, கருணாநிதி செய்திருந்தாலும், இடித்துரைக்கும் கேளிர் என்ற முறையில், அவற்றை ஏன் முன்னரே எடுத்துக் கேட்கவில்லை? தடுத்து நிறுத்தவில்லை? எது எப்படியோ, தலைவர்கள் என்ற லெவலில் இருந்து சில படிகள் கீழிறங்கி ஏவி விடப்பட்டு மேடையில் ஏகவசனத்தில் ஏசும்/பேசும் அடுத்த லெவல் அரசியல்வாதியாகிவிட்டார் வைகோ. அண்ணா சொன்ன கண்ணியத்தை காற்றிலே பறக்கவிடாமல் அரசியல் வாதிகளே கொஞ்சம் அடக்கி வாசிக்கலாம்.

Friday, March 31, 2006

சாதிகள் இல்லையடி....

சாதிகள் இல்லையடி பாப்பா. ஆனால் ஆட்சி அமைக்க அறுதிப் பெரும்பாண்மை வேண்டும். பெரும்பாண்மைக்கு சாதி ஓட்டு வங்கிகள் வேண்டும். ஒவ்வொரு சாதியும் தன் பலத்தை அங்கீகாரம் செய்யும் அணியின் கால்களில். இல்லையேல் பலத்தை தேர்தல் முடிவுகளில் உறுதிப்படுத்த தனித்துப் போட்டி. இல்லையேல் 500 வேட்பாளர் நிறுத்தி தேர்தலைத் தள்ளிவைக்க முயற்சி. இவர்கள் பண்ணும் கூத்தில் சாதிக் கோடு மறைவதாகத் தோன்றவில்லை. மாறாக பளிச்சென்று தெரிகிறது. பாரதியைப் பார்த்து கைகொட்டிச் சிரிக்கிறது.

Thursday, March 02, 2006

தி.மு.க-அ.தி.மு.க?

தி.மு.க-அ.தி.மு.க, ரஜினி-கமல், இந்து-முஸ்லிம் இது போன்ற 'துருவ' சார்புகள் எல்லாவற்றிலும் இருக்கத்த்டான் செய்கின்றன. இந்த சார்புகள் தனிநபர் விருப்பங்கள். இன்னொருவரை பாதிக்காத வரையில் இதில் தவறு ஏதுமில்லை. அலுவலகத்திலும், நண்பர்குழுக்களிலும், விருந்துகளின்போதும் இந்த துருவ விவாதங்களில் கலந்து கொண்டதிலும், பார்வையாளனாக இருந்ததிலும் ஒரு பலனும் இருந்ததாக உணரவில்லை.

அண்மையில் எனது அலுவலகத்தில் இந்த விவாதம் நடந்தது. என்னோடு பல விஷயங்களில் கருத்து ஒற்றுமை உள்ள நண்பர் எதிர் முன்னேற்ற கழகத்தை ஆதரித்து உணர்ச்சி கொந்தளிக்க பேசியது வியப்பைத் தந்தது. சிறு வயதிலிருந்து பெற்றோர், நண்பர்கள் வட்டம், சொந்த ஊர் நிலவரம் என பல மாறிகளின் விளைவு இந்த சார்பு.

எனது பணிவான கருத்தில் இந்த இரண்டு மு.கழகங்களுமே மக்களுக்கு முட்செண்டுகள் தாம், மலர்கள் அல்ல. என்ன செய்வது, உறுதியான வேறு நல்ல கட்சி இல்லாததால் இதில் ஏதோ ஒன்றை ஆதரிக்க வேண்டிய கட்டாயம். ஆங்கிலத்தில் between the devil and the deepsea என்று சொல்வது போல இரண்டில் எது குறைந்த கொடுமை ராட்சசன் என்று நான் கருதுகிறேனோ அதற்கு வாக்களிக்கிறேன்.

எனக்கு நானே மீண்டும் நினைவுபடுத்திக்கொள்கிறேன், நான் இங்கு அரசியல் எழுத வரவில்லை. சொல்ல வந்தது இதுதான்:
தி.மு.க - அ.தி.மு.க, அஜித்-விஜய் (தணுஷ் - சிம்பு?) போன்ற விவாதங்கள் எதிரணியினரை மாற்றப் போவதில்லை. பேசாமல் சிரித்துக்கொண்டே இந்த விவாதத்தை எப்படியாவது தவிர்த்து விடுங்கள். அலுவலக நேரமும், வீட்டு நிம்மதியும், விருந்துகளில் நட்பும் மிச்சம்.